முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாடு திரும்ப அனுமதிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பொதுஜன பெரமுன இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இங்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்த்து நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பூரண ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக தீவு திரும்புவதற்கு இடம் வழங்க வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இது ஜனாதிபதி உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் மிக முக்கியமான கோரிக்கை எனவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் பொதுஜன பெரமுன சார்பில் பிரசன்ன ரணதுங்க, சாகர காரியவசம், ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஷ, சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஜனாதிபதி தரப்பில் சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்தன, ருவான் விஜயவர்தன, ஷமல் செனரத் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.