நாட்டின் ஒன்பது மாகாணங்களுக்கான ஆளுநர்களின் நியமனம் பெரும் அரசியல் குழப்பமாக மாறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடைய பலரை ஆளுனர்களாக நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே தீர்மானித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆளுனர் பதவிகளுக்கு தனியான பெயர்களை முன்மொழிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இரு தரப்பிற்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில், தமது அப்பிராயம் கணக்கிலெடுக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடம்பிடித்து வருகிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் பொதுஜன பெரமுன எம்.பிக்கள் 8 பேர் உள்ளதால், அவர்களின் அப்பிராயத்தை மீறி சட்ட விரோதமாக செயற்பட வேண்டாம் என முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க உள்ளிட்ட எம்.பிகள் பலர் ஏற்கனவே அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் தயா கமகே, ஜோன் அமரதுங்க நவீன் திசாநாயக்க மற்றும் வடமேற்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஷமேல் செனரத் ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் பதவிக்கு ஐ.தே.கவின் பட்டியலில் உள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூன்று ஆளுநர்களுக்கு அந்த ஆளுனர் பதவிகளில் நீடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கட்சி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
லலித் யூ கமகே, வில்லி கமகே மற்றும் எம். ஜே.மூசம்மில் ஆகியோரையே ஆளுனர்களாக தொடர அனுமதிக்குமாறு பெரமுன கோரியுள்ளது.