எதிர்வரும் 2023-27 காலகட்டத்தில் நடைபெற உள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி20 ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான சுற்றுப்பயண திட்டத்தினை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).
நடப்பு 2019-23 கிரிக்கெட் போட்டிகளுக்கான எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது எதிர்வரும் 2023-27க்கான போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஐசிசி-யின் முழு நேர உறுப்பினர்களுக்கான சர்வதேச கிரிக்கெட் அட்டவணை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக சொல்லப்பட்டுள்ள நிலையில் அந்த வகை போட்டிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஐசிசியின் முழு நேர உறுப்பினர்களாக உள்ள 12 கிரிக்கெட் அணிகளுக்கான அட்டவணையின்படி மொத்தம் 777 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 173 டெஸ்ட், 281 ஒருநாள் மற்றும் 326 ரி20 போட்டிகள் அடங்கும். இதில் இரண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற உள்ளது. 2025 அளவில் சம்பியன்ஸ் கிண்ண தொடர் மீண்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் பலப்பரீட்சை செய்யும் போது தலா 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019-23 காலகட்டத்தில் 151 டெஸ்ட், 241 ஒருநாள் மற்றும் 301 ரி20 போட்டிகள் என 777 போட்டிகள் திட்டமிடப்பட்டன. நடப்பு 2019-23 காலகட்டத்தில் 694 போட்டிகளே நடந்தன.
புதிய அட்டவணையின்படி, பங்களாதேஷ் அதிக இருதரப்பு சர்வதேச போட்டிகளை (150) விளையாடுகிறது, அதைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் (147), இங்கிலாந்து (142), இந்தியா (141), நியூசிலாந்து (135), அவுஸ்திரேலியா (132), இலங்கை (131), பாகிஸ்தான் (130), ஆப்கானிஸ்தான் (123), தென்னாரிக்கா (113), அயர்லாந்து (110), சிம்பாப்வே (109) ஆகிய நாடுகள் உள்ளன.
ரி20 போட்டிகளை பொறுத்தவரை, மேற்கிந்தியத் தீவுகள் அதிக இருதரப்பு போட்டிகளை (73) விளையாடுகின்றன, அதைத் தொடர்ந்து இந்தியா (61), ஆப்கானிஸ்தான் (57), பங்களாதேஷ் (57), நியூசிலாந்து (57), பாகிஸ்தான் (56), இலங்கை (54), இங்கிலாந்து (51), அவுஸ்திரேலியா (49), அயர்லாந்து (47), தென்னாபிரிக்கா (46), சிம்பாப்வே (45) ஆகிய நாடுகள் உள்ளன
பங்களாதேஷ் அதிக இருதரப்பு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது (59). அதைத் தொடர்ந்து இலங்கை (52), அயர்லாந்து (51), இங்கிலாந்து (48), மேற்கிந்தியத் தீவுகள் (48), பாகிஸ்தான் (47), நியூசிலாந்து (46), ஆப்கானிஸ்தான் (45) , சிம்பாப்வே (44), அவுஸ்திரேலியா (43), இந்தியா (42) மற்றும் தென்னாபிரிக்கா (39) ஆகிய நாடுகள் உள்ளன.
டெஸ்ட் கிரிக்கெட்டில், இங்கிலாந்து அதிக போட்டிகளில் (43) விளையாடுகிறது. அவுஸ்திரேலியா (40), இந்தியா (38), பங்களாதேஷ் (34), நியூசிலாந்து (32), தென்னாபிரிக்கா (28), பாகிஸ்தான் (27), மேற்கிந்திய தீவுகள் ( 26), இலங்கை (25), ஆப்கானிஸ்தான் (21), சிம்பாப்வே (20), அயர்லாந்து (12) போட்டிகளில் விளையாடுகின்றன.
இந்த காலகட்டத்தில் இந்தியாவில் 2023 ஒரு நாள் உலகக் கோப்பை, 2024 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் T20 உலகக் கோப்பை, 2025 இல் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி, 2026 இல் இந்தியா மற்றும் இலங்கையில் ரி20 உலகக் கோப்பை, 2027 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியாவில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறும்.