பெங்களூரு அருகே உள்ள சோலூர் நகரில் ஆச்சிரமத்திலிருந்து ஒரு சாமியார் காணாமல் போன சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் லௌகீக வாழ்வில் ஆர்வம் ஏற்பட்டு, தனது காதலியுடன் ஓடிச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம், ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா சோலூர் பகுதியில் குத்தகே மடம் உள்ளது. இந்த மடத்தில் சாமியாராக இருந்து வருபவர் லிங்காயத் சீர் சிவமஹந்த சுவாமிஜி. சாமியாராகும் முன்னர் அவரது பெயர் ஹரீஷ் பூர்வாஷ்ரம்.
சுவாமிஜியாக தீட்ஷைபெற்ற பிறகு, சோலூர் மடத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
சுமார் ஒன்றரை மாதங்களின் முன் திருமணமான, புதுமணப் பெண் ஒருவரை சுவாமிஜி காதலித்துள்ளார். அந்த பெண் மடத்திற்கு வந்த போது சுவாமிஜி காதலில் விழுந்துள்ளார்.
சுவாமிஜி திடீரென காணாமல் போயுள்ளார். அவருக்கு என்ன நடந்ததென தேடி வந்த நிலையில், சோலூர் மடத்தில் சுவாமிஜி எழுதி வைத்துள்ள கடிதமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஓடிப்போன சுவாமிஜி எழுதி வைத்திருந்த கடிதத்தில்,
நான் பார்ப்பன வாழ்க்கைக்கும் ஆன்மீக வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறேன். என் வாழ்க்கையில் எனக்கு நிம்மதி இல்லை. நான் தற்போதைய நிலையை விட்டு செல்கிறேன். தற்போதைய வாழ்க்கையின் மீது (ஆன்மிகம்) கடுமையான வெறுப்பை வளர்த்துக் கொண்டேன்.
உங்களுக்கு (பக்தர்களே)… காரணம் தெரியும் என்று நம்புகிறேன். தயவு செய்து என்னைத் தேட எந்த முயற்சியும் செய்யாதீர்கள். காவித் துணியைக் கழற்றிய பிறகு, என் வாழ்நாளில் அதை மீண்டும் உடுத்த மாட்டேன்.
என்னைக் கண்டுபிடிக்க ஏதேனும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால், எனதுது சடலத்தையே பார்ப்பீர்கள் என்றும் சுவாமிஜி கூறியுள்ளார்.
இந்த விவகாரம் மடத்துக்கும், புதுமணப் பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதால், தற்போதுள்ள சூழ்நிலையில், போலீசாரை அணுகுவதில் மடத்தினர் தயக்கம் காட்டி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.