கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ், சிங்கள எழுத்தாளர்களின் படைப்புக்கள் மற்றும் அவர்களின் திறமைகளை வெளியுலகிற்கு கொண்டு வருகின்ற செயற்பாடுகளை மாகாண பண்பாட்டாலுவல்கள் திணைக்களம் கடந்த பல வருடங்களாக பாரிய பங்காற்றிவருகின்றதென கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் சரண்யா சுதர்சன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அச்சுருவாக்கப்பட்ட 4 வகை நூல்களை வெளியீட்டு வைக்கும் விழாவும், அந்த நூல்களை நூலாசிரியர்களிடம் கையளித்து வைக்கும் நிகழ்வும் (14) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மூவின மக்களும் வாழுகின்ற மாகாணமாக இருக்கின்றது. அவர்களுக்குள் இருக்கின்ற படைப்புக்கள் மற்றும் கலை, கலாசார விடயங்களை வெளியுலகிற்கு கொண்டு செல்வதுடன் நின்றுவிடாமல் அவர்களையும், இளம் எழுத்தாளர்களையும் இன்னுமின்னும் ஊக்குவிக்கும் செயற்பாடுகளை மாகாண திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
மாகாணத்திலுள்ள படைப்பாளிகளினால் சமர்ப்பிக்கப்படுகின்ற படைப்புக்கள் யாவும் அதற்கான குழுவினர்களினால் பரிசீலிக்கப்பட்டு, அதில் திறமையான படைப்புக்கள் இனங்கண்டு இவ்வாறு வெளியீடு செய்து படைப்பாளிகளுக்கும் நூல்களை வழங்கி வருகின்றோம். இதன் மூலம் அவர்கள் இன்னும் பல படைப்புக்களை வெளிக்கொண்டு வருகின்ற ஊக்கத்தையும், இளம் எழுத்தாளர்களின் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றது என்றார்.
இதன்போது, அம்மாவுக்கு பிடித்த கனி என்ற சிறுவர் பாடல்கள் எழுதிய நூலாசிரியர் கலாபூசனம் பி.கனகரத்தினம், கொட்டியாரப்பற்று வன்னிபங்கள் என்ற வரலாறு எழுதிய நூலாசிரியர் வைத்திய கலாநிதி த.ஜீவராஜ், நவீன சீதை என்ற சிறுவர் கதைகள் எழுதிய நூலாசிரியர் கவிச்சுடர் (திருமதி) க.சிவரமணி, கடலோரப்பாதை என்ற சிறுவர் கதைகள் எழுதிய நூலாசிரியர் ஏ.எம்.முகைதீன் ஆகியோர்களினால் எழுதப்பட்ட நூல்கள் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அச்சுருவாக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு தலா 200 நூல்களையும் மாகாணப் பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன் வழங்கி வைத்தார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு மிக அன்மையில் நியமனம் பெற்ற மாகாணப் பணிப்பாளருக்கு இவ்விழாவின்போது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.