காட்டுவாசி செய்யும் வேலைகளை வடக்கு ஆளுனர் செய்கிறார். சாரத்தை கட்டிக் கொண்டு யாழ்ப்பாணத்தில் சண்டித்தனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கிளிநொச்சி மற்றும் முல்லை மாவட்டத்தில் இராணுவத்தின் ஆளுகைக்குள் முன்பள்ளிகள் இயங்குவது சிறார் உரிமைகளை மீறுவதுடன், ஐ.நா சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்ட சிறுவர் உரிமைகளை மீறுவதையும் சுட்டிக்காட்டினார்.
முன்பள்ளிகளிற்கு சூட்டப்பட்ட தமிழ், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுடன் தொடர்புடைய பெயர்கள் நீக்கப்பட்டு, இராணுவத்துடன் தொடர்புடைய பெயர்கள் சூட்டப்படுவதாகவும், இது உலகில் எங்கும் நடக்காத சிறுவர் உரிமை மீறல் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், முன்பள்ளி பெயர்ப்பலகைகளில் சிவில் பாதுகாப்பு திணைக்கள இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளதையும், அதில் இரண்டு துப்பாக்கிகள் உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
சிறுவர்களிற்கான புத்தகப்பையில் சிவில் பாதுகாப்புபடை என பொறிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி, இந்த விவகாரங்களிற்கு ஆதாரமாக புகைப்படங்களையும் சமர்ப்பித்தார்.
இதன்போது, ‘இந்த விடயங்கள் பற்றி வடக்கு ஆளுனருக்கு எழுத்துமூலம் அறிவித்தேன். அவர் நிர்வாகம் தெரியாதவர். சாரத்தை கட்டிக் கொண்டு சண்டித்தனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். காட்டுவாசியை போல செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். அவருக்கு தமிழ் தெரியாது. பெயர்தான் தமிழ். இவ்வாறானவர்களைத்தான் நீங்கள் ஆளுனர்களாக நியமிக்கிறீர்கள்’ என தெரிவித்தார்.