தென்னாபிரிக்காவின் க்ரூகர்ஸ்டோர்ப் நகரில் படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்து துப்பாககி முனையில் 8 நடிகைகளை கூட்டுப் பலாத்காரம் செய்து, பொருட்களை கொள்ளையடித்ததாகக் கூறப்படும் 80க்கும் மேற்பட்ட ஆண்கள் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
க்ரூகர்ஸ்டோர்ப் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்று கூடி, காமுகர்களிற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைவிடப்பட்ட சுரங்க தளத்தில் இருந்து கைது செய்யப்பட்டனர்.
திங்களன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில், “க்ரூகர்ஸ்டோர்ப்பில் நடந்தது தேசத்திற்கு அவமானம்” என்று காவல்துறை அமைச்சர் பெக்கி செலே கூறினார்.
கடந்த வியாழன் அன்று ஒரு இசை வீடியோ படப்பிடிப்பிற்காக ஒரு கைவிடப்பட்ட சுரங்க தளத்தில் ஒரு தயாரிப்பு குழுவினர் செட்டை தயார் செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது.
“22 பேர் – 12 பெண்கள் மற்றும் 10 ஆண்கள் – ஒரு மியூசிக் வீடியோவை படமாக்குவதில் மும்முரமாக இருந்தனர், அவர்கள் போர்வைகளை அணிந்த ஆயுதம் ஏந்திய ஒரு குழுவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது” என்று கௌடெங் மாகாணத்தின் போலீஸ் கமிஷனர் லெப்டினன்ட் ஜெனரல் எலியாஸ் மாவேலா கூறினார்.
அவர்கள் அனைவரையும் படுக்க உத்தரவிட்டனர், பின்னர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர், பின்னர் குழுவினரின் வீடியோ உபகரணங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உடைமைகளுடன் தப்பி ஓடிவிட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஜோகனஸ்பேர்க்கில் தங்கத்தை தேடும் சட்டவிரோத சுரங்கத் தொழிலாளிகள்.
இப்பகுதியில் அதிகரித்து வரும் குற்றங்களுக்கு உள்ளூர்வாசிகள் அவர்களைக் குற்றம் சாட்டுகின்றனர், அதே நேரத்தில் பெண்கள் அமைப்புகள் கூறுகையில், இதுபோன்ற குற்றங்கள் சில காலமாக க்ரூகர்ஸ்டோர்ப்பைப் பாதிக்கின்றன.
தாக்குதல் தொடர்பாக இதுவரை எவரும் குற்றம் சாட்டப்படாத நிலையில், சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்தமை மற்றும் திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
வல்லுறவிற்குள்ளாக்கப்பட்ட பெண்களின் டிஎன்ஏ மாதிரிகளின் ஆய்வக ஆய்வுகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் என்று காவல்துறை அமைச்சர் பெக்கி செலே கூறினார்.