அரச துறை ஊழியர்களுக்கு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போதுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச துறை ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக வெள்ளிக்கிழமைகளில் அரசாங்க அலுவலகங்களை மூடுவதற்கான யோசனைக்கு ஜூன் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
வரவிருக்கும் உணவுப் பற்றாக்குறையைப் போக்க அரசுத் துறை ஊழியர்களும் வெள்ளிக்கிழமைகளில் விவசாயப் பணிகளில் ஈடுபட ஊக்குவிக்கப்பட்டனர்.
அதன்படி, வெள்ளிக்கிழமைகளில் மூன்று மாதங்களுக்கு அரசு அலுவலகங்களை மூட அனுமதி அளிக்கும் வகையில் ஜூன் 15ஆம் திகதி சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
எவ்வாறாயினும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த சுற்றறிக்கையை இரத்து செய்யுமாறு பொது நிர்வாக அமைச்சர் என்ற வகையில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொதுப் போக்குவரத்து சீரமைக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், நாட்டில் உணவுப் பற்றாக்குறையைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.