ஜனநாயக போராட்டக்காரர்களின் குரல்களுக்கு செவிசாய்க்க தற்போதைய அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் குணவர்தன, அரசாங்கம் ஜனநாயக ரீதியில் செயற்படுவதாகவும், போராட்டக்காரர்களுடன் இணைந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அமைதியான போராட்டக்காரர்களுடன் இணைந்து பணியாற்ற அவர்கள் ஆர்வமாக இருந்தாலும், அவர்கள் வன்முறை மற்றும் விரோதப் போக்கை நிராகரிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இலங்கை எதிர்காலத்தில் சவாலான காலங்களை எதிர்கொள்ளும் எனவும், அதற்கான தீர்வுகளை பாராளுமன்றம் வழங்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வன்முறையில் ஈடுபடுவதையோ அல்லது பாராளுமன்றத்தை தாக்குவோம் என அச்சுறுத்துவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உதாசீனம் செய்யப்போவதில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார்.
தற்போதுள்ள சவால்களை சமாளிக்க இளைஞர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
COVID-19 நெருக்கடியை இலங்கை வெற்றிகரமாக சமாளிக்க முடிந்தது என்றும், தற்போது நிலவும் நிதி நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
நட்பு நாட்டவர்கள் மற்றும் சர்வதேச பங்காளிகளின் ஆதரவையும் அவர்கள் நாடியுள்ளதாக பிரதமர் குணவர்தன குறிப்பிட்டார்.
சில அரசியல் சீர்திருத்தங்கள் அவசியம் எனவும், செயற்குழு முறையை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
முழு நாட்டையும் பாதித்துள்ள நிதி நெருக்கடியை சகல தரப்பினரின் ஆதரவுடன் இலங்கை சமாளிக்க முடியும் என்றார்.