காலி முகத்திடலில் இருந்து போராட்டக்காரர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் தாம் நம்புவதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அவசரகாலச் சட்டங்கள் மீதான விவாதத்தின் போது உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பொறுப்பற்ற மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அவர்களை தற்போதைய இடங்களிலிருந்து அகற்ற வேண்டும் என குறிப்பிட்டார்.
தனிப்பட்ட சொத்துக்கள் தீயிட்டு அழிக்கப்படும் என்ற அச்சத்தினால் இந்த நபர்களுக்கு எதிராக பேசுவதற்கு அனைவரும் தயங்குவதாக அமைச்சர் கூறினார்.
எதிர்ப்பாளர்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால் நாட்டில் அனைவரும் வாழ முடியாத நிலை ஏற்படும் என்றார்.
நிலைமையை எந்த வகையிலும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதி செயலகத்தை அண்மித்துள்ள போராட்டம் நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடம் எந்த வகையிலும் பொருத்தமானதல்ல. அண்மைய அனைத்து நிகழ்வுகளாலும் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் ரணதுங்க மேலும் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் என்ற ரீதியில் தனது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த காலி முகத்திடலில் இருந்து போராட்டக்காரர்கள் அகற்றப்பட வேண்டும் என்றும், விஹாரமஹாதேவி பூங்காவிற்கு மாற்றப்பட வேண்டும் என்றும் கூறிய அமைச்சர் ரணதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் தனது அலுவலகத்திற்கு அருகாமையில் இருப்பதால் போராட்டக்காரர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேண முடியும் என்றார்.