இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக நேற்று பதவியேற்ற திரவுபதி முர்முவுக்கு ஒரு பசு, எருமை மற்றும் 16 ஜோடி உடைகளை தந்தை வழங்கி உள்ளார்.
ஒடிசா உபர்பேடா விடுதியில் தங்கி பயிலும் பழங்குடிகள் பள்ளியில், 7-ம் வகுப்பு வரை பயின்றுள்ளார் திரவுபதி. அப்போது அந்த கிராமத்தில் இருந்து பள்ளியில் படிக்கும் ஒரே பெண்ணாக இவர் இருந்துள்ளார். நன்கு படித்த திரவுபதி அடுத்து புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் சேர்ந்து கல்வியை தொடர்ந்துள்ளார். சிறுவயது முதல் துணிச்சலுடன் பேசி எதையும் தைரியமாக அணுகும் வழக்கம் திரவுபதிக்கு உண்டு. அதே காலக்கட்டத்தில் புவனேஸ்வரின் மற்றொரு கல்லூரியில் படித்தவர் ஷியாம் சரண். இவருக்கு திரவுபதியை மிகவும் பிடித்துவிட்டது.
அதன்பிறகு படிப்பை முடித்துவிட்டு வங்கி பணியில் சேர்ந்தார் ஷியாம். ஒரு நாள் திரவுபதியின் உபர்பேடா கிராமத்து வீட்டுக்கு உறவினர்கள் சிலருடன் பெண் கேட்டுச் சென்றுள்ளார். அவர்களது காதல் விவகாரத்தை கேள்விப்பட்ட திரவுபதியின் தந்தை பிரஞ்சி நாராயண் துடு, மிகவும் கோபப்பட்டார்.
ஷியாமுக்கு தனது மகளை மணமுடிக்கவும் மறுத்துவிட்டார். ஆனால், சிறிதும் கவலைப்படாத இளைஞர் ஷியாம், அந்த கிராமத்திலேயே 3 தினங்கள் உறவினர்களுடன் தங்கி விட்டார். கிராமத்தின் மூத்த குடிகளை சந்தித்து தனது நோக்கத்தை எடுத்துரைத்துள்ளார்.
அதேசமயம், ஷியாமை தவிர வேறு எவருடனும் மணமுடிப்பதில்லை என திரவுபதியும் உறுதியாக இருந்துள்ளார். இதனால் மனம் இறங்கிய தந்தை நாராயண்துடு, திருமணத்துக்கு சம்தித்துள்ளார்.
ஒடிசாவின் பழங்குடிகள் முறைப்படி பெண் வீட்டார் திருமணத்துக்கு பின் சீர் செய்து அனுப்ப வேண்டும். இதை மாப்பிள்ளை வீட்டாருடன் கலந்து பேசி முடிவு எடுப்பது வழக்கம். அதன்படி, திரவுபதிக்கு ஒரு எருமை மற்றும் பசுவுடன் 16 ஜோடி உடைகளையும் அவரது தந்தை வழங்கினார். கடந்த 1980-ல் நடைபெற்ற அவர்களின் திருமணத்துக்கு பிறகு திரவுபதி துடு என்றிருந்த பெயர், திரவுபதி முர்மு என்று மாறியது.
தனது 2 குழந்தைகள் லக்ஷ்மண், ஷிபுன், அடுத்து கணவர் ஷியாம் ஆகிய மூவரும் சில ஆண்டுகள் இடைவெளியில் அடுத்தடுத்து இறந்துவிட அவர்களது நினைவால் திரவுபதி முர்மு மிகவும் வாடியுள்ளார். மூவரின் நினைவாக தனது கணவரின் பஹார்பூர் கிராமத்தில் உள்ள சொந்த நிலத்தில் ஒரு பள்ளியை கடந்த 2016-ல் அமைத்தார். அதற்கு ஷியாம், லஷ்மண், ஷிபுன் ஆகிய 3 பெயர்களின் முதல் எழுத்தை வைத்து எஸ்.எல்.எஸ்.பள்ளி என்று பெயரிட்டார்.
பஹார்பூரில் திருமணமான சுமார் 125 குடிகள் உள்ளன. சுமார் 400 வாக்காளர்களும் கொண்ட இக்கிராமத்தில் திரவுபதியின் சந்தாலி மற்றும் முண்டா சமூகப் பழங்குடிகள் வாழ்கின்றனர்.
ராய்ரங்பூரின் உபர்பேடா கிராமத்தில் தாம் பயின்ற பள்ளியிலேயே திரவுபதி ஆசிரியராகவும் சில மாதங்கள் பணியாற்றி உள்ளார். அதன் பிறகு ‘ஸ்ரீஅரபிந்தோ இன்டகரல் எஜுகேஷன் சென்டர்’ கல்வி நிலையத்தில் உதவி பேராசிரியராகவும் பணி செய்துள்ளார்.
அப்போது திரவுபதி நீர்ப்பாசனம் மற்றும் மின்சார துறையில் எழுத்தர் பணியும் செய்துள்ளார். அதன் பிறகுதான் 1997-ல் நகர சபை தேர்தலில் போட்டியிட்டு அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். தனது குடும்பத்தின் சோக நிகழ்வுக்கு பின் சைவ உணவுக்கு மாறிவிட்ட திரவுபதி, இஞ்சி மற்றும் வெங்காயம் கூட உணவில் சேர்ப்பதில்லை.
ராய்ரங்பூரில் குறைந்த மின் ஒளியுடன் தனது வீட்டில் பூசை அறையையும் வைத்துள்ளார் திரவுபதி. இதனுள், விஷ்ணு, லஷ்மி, குழந்தை கிருஷ்ணன் மற்றும் பிரம்மகுமாரியின் படங்களை வைத்துள்ளார். திரவுபதியின் உபர்பேடா கிராமத்தில் சுமார் 6,000 பேர் வசிக்கின்றனர்.
இங்குள்ள திரவுபதியின் தந்தை நாராயண் துடுவின் வீடு ஒன்று சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதில் தற்போது திரவுபதியின் 2 சகோதரர்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். கிராமத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள ராய்ரங்பூருக்கு ஆற்றை கடந்து செல்வது சிரமமாக இருந்துள்ளது. 2003-ல் திரவுபதியின் முயற்சியில் அதில் ஒரு பாலம் அமைந்த பின் பிரச்சினை தீர்ந்துள்ளது.
சாதாரண கிராமத்தில் இருந்து குடியரசுத் தலைவர் பதவி வரை உயர்ந்த திரவுபதியின் உண்மையான பெயர் புதி முர்மு. இவர் பள்ளியில் பயிலும் போது அவரது சமூகத்தை சேர்ந்தவரும், மற்றொரு மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஒரு பெண் ஆசிரியர்தான் திரவுபதி என்ற பெயரை சூட்டியுள்ளார். பின்னர் அதுவே நிலைத்துவிட்டது. இந்த தகவலை திரவுபதியே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.