தனது சிறை அறையில், சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்ததாக ராஜீவ் கொலை வழக்கு ஆயுள் கைதி முருகன் மீதான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேலூர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் உள்ள முருகனின் அறையில், கடந்த 2020-ம் ஆண்டு சிறை வார்டன் உள்ளிட்டோர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த முருகன், சிறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முருகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், “குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக” கூறினார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “முருகன் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேலூர் நடுவர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்து” உத்தரவிட்டார்.