இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, அமைப்பு மாற்றத்தை வலியுறுத்தி போராட்டங்களை நடத்துபவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதாகவும், அழிவை ஏற்படுத்தும் சட்டத்தை மீறுபவர்களை சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நேற்று (20) ராஜபக்ஷக்களின் பின்னணியில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கொழும்பில் உள்ள கங்காராம விகாரையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.
“அமைதியான போராட்டங்களை நடத்துபவர்கள் மற்றும் அமைதியான பெரும்பான்மையினரின் பேச்சைக் கேட்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அழிவை உருவாக்குபவர்களை சட்டத்தின் மூலம் எதிர்கொள்ளவும் தயாராக உள்ளோம்.
போராட்டம் என்ற போர்வையில் வீடுகளை எரிப்பதும், ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆக்கிரமிப்பதும் ஜனநாயகம் அல்ல.
இவ்வாறான செயற்பாடுகள் சட்டவிரோதமானவை. அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
போராடும் இளைஞர்கள் எதிர்காலத்தை கட்டியெழுப்ப விரும்பினால், அவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றார்.
“மோதல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நாடாளுமன்றத்தில் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவேன் என்றும் உறுதியளிக்கிறேன். பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டு முறைமை மாற்றத்தை ஏன் கொண்டு வர முடியாது என எதிர்ப்பாளர்கள் மற்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர். இந்த கேள்விகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.
“ராஜபக்சக்கள் அவருடைய நண்பர்கள்தானா என்று கேட்டதற்கு, அவர்கள் நண்பர்கள் இல்லை. நான் மக்களின் நண்பன் என்று ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
“இங்கே ராஜபக்சக்கள் யாரையாவது பார்க்கிறீர்களா. திருமதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவர் ஒரு கட்சி, நான் இன்னொரு கட்சி. நான் மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதால் அவர்கள் எனது நண்பர்கள் என்று அர்த்தம் இல்லை,” என்று அவர் இது தொடர்பாக கூறினார்.
அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்திருப்பவர் அந்தப் பதவியை ஏற்க வேண்டும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.