ஜஜனாதிபதி தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து வாக்களிப்பார்கள் என ரணில் தரப்பு நம்பிக்கையுடன் இருந்தாலும், கள நிலவரம் அவ்வாறல்ல என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு டலஸ் அழகப்பெருமவிற்கே என நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலை ஆதரிப்பார்கள் என ரணில் தரப்பு தெரிவித்துள்ளது.
ராஜபக்ஷ பின்னணியுடைய ஊடகங்கள் பல இப்பொழுது ரணில் ஆதரவு நிலைப்பாடுடன், இந்த செய்தியை வெளியிட்டு வருகின்றார்கள்.
எனினும், இது போலிச் செய்தி என்பதை தமிழ் பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.
கூட்டமைப்பின் மூன்று எம்.பிக்களை வலைவீசி பிடிக்க ரணில் தரப்பு தீவிர முயற்சி மேற்கொண்டது என்பது பழைய நிலவரம். அது தொடர்பான தகவல்களை தமிழ்பக்கம் அறிந்திருந்தாலும், காரணம் கருதி தமிழ் பக்கம் அதை செய்தியாக வெளியிட்டிருக்கவில்லை.
எனினும், நேற்று காலையுடன்அந்த நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டது.
நேற்று மதியமளவில் தனிப்பட்ட முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட தலைவர்கள் சிலர் நடத்திய கலந்துரையாடலை தொடர்ந்து, ரணிலிற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் இல்லாமல் போனது.
குறிப்பிட்ட ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகருக்கு, நேற்றிவு மட்டும் 12 தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. ஐ.தே.கவின் முக்கிய பிரமுகர் ஒருவர் இந்த அழைப்பை ஏற்படுத்தியிருந்தார். அந்த பிரமுகரே ஏற்கனவே ‘டீல்’ பேச முயற்சித்திருந்தார். எனினும், கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை தொடர்ந்து, ரணில் தரப்பின் தொலைபேசி அழைப்புக்களை கூட்டமைப்பு எம்.பிக்கள் தவிர்த்து வருவதை தமிழ்பக்கம் உறுதிசெய்தது.
கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் டலஸ் அழகப்பெருமவிற்கே வாக்களிப்பார்கள் என்பதை தமிழ் பக்கம் சுயாதீனமாக உறுதி செய்துள்ளது.