முஸ்லிம்களின் புனித தலங்களில் ஒன்றான சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் புனித ஹஜ் பயணத்தின்போது நிகழ்த்தப்படும் அரஃபா சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை முதன்முறையாக தமிழ் மற்றும் இந்தியில் ஒலிபரப்பாகிறது.
ஹஜ் பெருநாள் உலகளவில் முஸ்லிம்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். முஸ்லிம்களின் புனித தலங்களில் ஒன்றான சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் முஸ்லிம்களின் புனிதக் கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற கொரோனா பரவலுக்கு முன்பு வரை 25 இலட்சம் பேர் வரையிலும் புனித யாத்திரை மேற்கொண்டனர்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சில ஆயிரம் யாத்ரீகர்கள் மட்டுமே ஹஜ் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு உலகம் முழுவதும் 10 இலட்சம் யாத்ரீகர்களுக்கு சவுதி அரேபியா அரசு அனுமதி அளித்தது.
இந்த ஆண்டு முதல் மெக்காவில் புனித ஹஜ் பயணத்தின்போது நிகழ்த்தப்படும் அரஃபா சொற்பொழிவு தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட உள்ளது.
மெக்காவில் உள்ள அல் நிம்ரா பள்ளிவாசலில் அரஃபா சொற்பொழிவு ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜ் யாத்திரையின்போது நிகழ்த்தப்படும். அரபியில் ஆற்றப்படும் அந்த உரை இதுவரை ஆங்கிலம், பிரெஞ்சு, மலாய், உருது, பாரசீகம், ரஷ்யன், சீனம், பெங்காலி, துருக்கியம், ஹௌசா ஆகிய 10 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், புனித ஹரம் இல்ல நிர்வாகத் தலைவர் ஷேய்க் அப்துர் ரஹ்மான் சுதைசி வழிகாட்டலில் இந்த ஆண்டு முதல் புதிதாக தமிழ், இந்தி, ஸ்பானிஷ், சுவாஹிலி ஆகிய 4 மொழிகள் இணைக்கப்பட்டு 14 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது.