அமெரிக்காவின் புளோரிடாவில் வசிக்கும் அயல்வீட்டாருக்கு இடையில் விந்தையான சண்டை நடந்துள்ளது. அதில் ஒருவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
ஜாக்சன்வில்லியைச் சேர்ந்த 54 வயதான ஜேம்ஸ் நிக்ஸ், கடந்த மாதம் தனது அண்டை வீட்டாரின் சேவலை கொன்றதற்காக கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 30 மணி நேரம் சிறையில் கழித்தார். ஆனால் அவர் தன்னை தற்காத்து கொள்ளவே சேவலை கொன்றதாக தெரிவித்துள்ளார்.
நிக்ஸ் தாம் அஞ்சல்பெட்டியைத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தபோது அந்தச் சேவல் அவர் மீது பாய்ந்து தாக்கியதாக தெரிவித்தார்.
“என்னைத் தாக்கவந்த சேவலைப் பயத்தில் தெரியாமல் தலையில் அடித்துக் கொன்றேன்” என்றார்.
அவரது அண்டைவீட்டுக்காரர் ஜேசன் டெஃபெலிசே வீடு திரும்பியபோது சேவல் உயிரிழந்திருந்ததை கண்டதும் நிக்ஸின் வீட்டுக்கு முன் சென்று அவருடன் சண்டையிட்டார்.
“நான் தான் கொன்றேன் என்று நிக்ஸ் சொன்னார்” என டெஃபெலிசே தெரிவித்தார்.
அதனால் அவர் காவல்துறையினரைத் தொடர்புகொண்டார். விலங்கு வதைக்காக நிக்ஸ் கைது செய்யப்பட்டார்.
“இது என்ன அநியாயமாக இருக்கிறது… எங்குப் பார்த்தாலும் கோழிகள் கொல்லப்படுகின்றன. தேவாலயத்தில், Popeyes உணவகத்தில், Kentucky Fried Chicken உணவகத்தில்” எனநிக்ஸ் தெரிவித்திருந்தார்.