நெரிசலைக் குறைப்பதற்காக ஒரு வாரத்திற்கான எரிபொருளை ஐஓசி நிறுவனத்தின் நிரப்பு நிலையங்களுக்கு ஒரேயடியாக அனுப்பி வைக்குமாறு இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தலைவர் குசும் சந்தநாயக்க, பல நாட்களாக வரிசையில் நிற்கும் அனைவருக்கும் எரிபொருள் விநியோகிக்க முடியாததால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்தார்.
ஒரு நிரப்பு நிலையத்தின் தேவை சுமார் 19,000 அல்லது 30,000 லிட்டர்களாக இருக்கும் போது, 6,600 லிட்டர் பவுசரை அனுப்புவது பயனுள்ளதாக இருக்காது.
கிட்டத்தட்ட 200 ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாரிய வரிசைகள் காணப்படுவதாக சந்தநாயக்க குறிப்பிட்டார்.
இராணுவம், பொலிசார் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணியாற்றும் இதர பணியாளர்களும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாததால் சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர் கூறினார்.
எனவே ஐ.ஓ.சி பெரிய பங்குகளை ஒரே நேரத்தில் அனுப்பினால், வரிசையில் நிற்கும் மக்களுக்கு அது பெரும் நிவாரணமாக இருக்கும் என்று தலைவர் குசும் சந்தநாயக்க வலியுறுத்தினார்.
அத்தியாவசிய சேவைகள் எனப்படும் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு விசேட ஏற்பாடுகள் எதுவும் வழங்கப்பட வேண்டியதில்லை அல்லது நிரப்பு நிலையங்களில் தனியான வரிசைகள் அமைக்கப்பட வேண்டியதில்லை என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியதையும் அவர் உறுதிப்படுத்தினார்.