மூத்த கலைஞர் ஜாக்சன் அந்தோனி பயணித்த காரில் மோதி விபத்துக்குள்ளான யானை தொடர்பில் விசாரணை நடத்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் மூன்று குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
விபத்தை அண்மித்த பகுதியில் யானைக்கு காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை எனவும், எனவே குறித்த யானை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்திற்கு முகங்கொடுத்த யானையை குறிப்பிட்டு, இந்தியாவில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்த யானையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த ஜாக்சன் அந்தோணி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்த அமைச்சர், விபத்து தொடர்பில் அமைச்சின் செயலாளரிடம் அறிக்கையும் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.