”பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கொடூரத்தைப் பகிர்வது மன்னிப்புக்காகவோ, அனுதாபத்துக்காகவோ அல்ல” என்று கூறியுள்ள பிரபல பாலிவுட் நடிகை குப்ரா சயித், தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து தனது புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார்.
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவர் குப்ரா சயீத் ‘சுல்தான்’, ‘Ready and City Of Life’ முதலான படங்களில் நடித்துள்ளார். இவர் தான் எழுதியுள்ள ‘ஓபன் புக்’ (open book) என்ற புத்தகத்தில் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதிலிருந்து மீண்டு வந்ததும் குறித்து விவரித்திருக்கிறார்.
அதுகுறித்து பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், “எனக்கு நடந்த இந்த பாலியல் துன்புறுத்தலை என் மீது கருணை காட்ட வேண்டும் என்பதற்காக நான் கூறவில்லை. அந்த நபர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காகவும் கூறவில்லை. நான் அதிலிருந்து நீண்ட நாட்களுக்கு முன்னரே வெளியே வந்துவிட்டேன்.
உங்களுடைய பாலியல் துன்புறுத்தல் அனுபவத்தைப் பற்றி பேசுவது நிச்சயம் அவ்வளவு எளிதானது அல்ல. அது நீண்ட நாள் காயத்தை தரும். எல்லாவற்றைவிட சமூகத்தில் பாலியல் துன்புறுத்தல்களை பொறுத்தவரை இரண்டு விதம் உள்ளது. ஒன்று, உங்கள் சம்மதத்துடன் நடப்பது, மற்றொன்று வலுகட்டாயப்படுத்துவது. இவை தொடர்பான விவரங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளும்போது மக்களிடமிருந்து நீங்கள் எதிர் விமர்சனங்களை பெறுவீர்கள்.
அதுமட்டுமல்லாது நீங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களைப் பேசும்போது நீங்கள் உங்களது குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் சமூகம் நினைக்கிறது. இந்த மனோபாவம் சில ஆண்களை ஊக்கப்படுத்தத்தான் செய்யும்.
நான் எப்போதெல்லாம் எனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசுகிறோனோ, அப்போதெல்லாம் என் அம்மா தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை அவர் எப்படி அமைதியாக புறக்கணித்தார் என்று அறிவுரை கூறுவார்.
எனக்கு மனபலம் குறைவு. அதனால்தான் நான் இந்த பாலியல் துன்புறுத்தல்களால் இவ்வளவு பாதிக்கப்படுவதாக என் அம்மா கூறுவார்.
ஆனால், இந்த அமைதி தவறு என்பதை என் அம்மா உணரவில்லை. பாலியல் துன்புறுத்தல்களைப் பேசும் பெண்களை இச்சமூகம் அவமானப்படுத்துகிறது. அவர்கள் கவன ஈர்ப்புக்காக இப்படி கூறுகிறார்கள் என்று விமர்சிக்கிறது.
என்னைப் பொறுத்தவரை பாலியல் துன்புறுத்தல் நடக்கும்போது நாம் அமைதியாக இருக்கக் கூடாது. அது குறித்து நாம் வெளிப்படையாக பேச வேண்டும். நாம் பேசத் தவறினால் அது அநீதியாகும். நீங்கள் உங்களது பாலியல் துன்புறுத்தல் கொடூரத்தைப் பகிரும்போது பிற பெண்களும் அதிலிருந்து வெளியே வந்து பகிருவார்கள். இதனை நான் உணர்ந்திருக்கிறேன்.
மேலும், பாலியல் துன்புறுத்தல்களை பகிர்வது என்பது அனுதாபத்தைப் பெறுவதற்கான ஒரு வித்தை அல்ல. இத்தகைய கொடூரமான குற்றத்தால் ஏற்பட்ட மன உளைச்சலை அனுதாபத்தின் மூலம் மாற்ற முடியாது. பாலியல் துன்புறுத்தல் போன்ற கொடூரமான குற்றத்திற்கு மன்னிப்பு கேட்பதன் மூலமும் அதனை குணப்படுத்த முடியாது” என்றார்.