என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே தான் இருப்பேன்” என்று நாசர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக வலம் வருபவர் நடிகர் நாசர். தவிர, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘ஹாஸ்டல்’ திரைப்படத்தில் அவரது நடிப்பு பலரையும் ஈர்த்தது. தொடர்ந்து ‘வாய்தா’ படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார். இதனிடையே உடல்நலம் காரணமாக நாசர் சினிமாவை விட்டு விலகப்போவதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் பரவிவந்தன.
இதனை மறுத்துள்ள நாசர் விளக்கம் அளித்துள்ளார். அதில், “நான் நடிகனாகத் தான் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட பின், அதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு முறையாகப் பயிற்சி பெற்றுதான் சினிமாவிற்கு வந்தேன். மேலும், வலைதளங்களில் சமீபகாலமாக வலம் வந்து கொண்டிருக்கும் என் தொழிலிலிருந்து ஓய்வு என்ற செய்தி என்னால் சொல்லப்பட்டது அல்ல; புனைவு. நான் நடித்துக் கொண்டிருப்பேன்; நடிப்பேன்.
எளிதாக தொடர்பு கொள்ளும் விதத்தில்தான் நான் பழகியிருக்கிறேன். சொந்த விஷயம் ஆகட்டும் தொழில் சார்ந்த விஷயம் ஆகட்டும், சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் அல்லது விளக்கம் இல்லாது தயவு செய்து தவறான பதிவு செய்ய வேண்டாம். என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே தான் இருப்பேன்” என்று நாசர் தெரிவித்துள்ளார்.