திருக்கோணமலை-மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்திய அதிகாரியை உடனடியாக இடமாற்றுமாறு கோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டம் இன்று (28) காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை இடம்பற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எமது வைத்தியசாலை எமக்கு வேண்டும்,நோயாளிகளை கவனிக்காத வைத்தியர் எமக்கு வேண்டாம்,நோயாளர்களின் நோய்களை கூறும்போது கிண்டலடிக்கும் வைத்தியர் வேண்டாம்,டொக்டர் சோபா எமக்கு வேண்டாம் என்ற பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் தற்போது மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வரும் டொக்டர் சோபா கும்புரேகம என்பவர் அநாகரீகமான முறையில் தமது கடமைகளை மேற்கொண்டு வருவதுடன், நோயாளர்கள் வைத்தியசாலைக்கு செல்லும் போது தேவையற்ற வசனங்களை நோயாளர்களை துன்புறுத்தும் விதத்தில் பாவித்து வருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்தியசாலைக்கு உள்ளே சென்று கடமை நேர வைத்திய அதிகாரி டொக்டர் டுலான் பெரேராவிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
இம் மகஜரை திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைப்பதாகவும், தற்போது குறித்த வைத்திய அதிகாரியான டொக்டர் சோபா கும்புரேகம கடமையில் இல்லையெனவும் அவர் வெளியே சென்றுள்ளதாகவும் கடமை நேர வைத்திய அதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்தார்.
இதனை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டு நாட்களுக்குள் குறித்த வைத்தியரை இடமாற்றம் செய்யாவிட்டால் மீண்டும் பாரிய எதிர்ப்பினை காட்டுவதாகவும் இதன்போது தெரிவித்தனர்..
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
-ரவ்பீக் பாயிஸ்-