அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எஸ்.எம்.முஷாரப் தன்னை கட்சியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக திங்கட்கிழமை (27) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சார்பாக சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகியிருந்தார்.
கடந்த மே மாதம் 31ஆம் திகதி நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடாத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் கட்சியின் யாப்புக்கு எதிராகவும் அதன் தீர்மானங்களுக்கு எதிராகவும் பாராளுமன்ற உறுப்பினர் செயற்பட்டார் என்று தெரிவித்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
மக்கள் காங்கிரஸ் கட்சியானது குறித்த பாராளுமன்ற உறுப்பினரினை கட்சியிலிருந்து நீக்கியமை தொடர்பாக இம் மாதம் முதலாம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்திருந்தது.
மேற்குறித்த ஒழுக்காற்று விசாரணை கட்சியின் பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம். ஷஹீட் தலைமையில் இடம்பெற்றிருந்தது.