மட்டக்களப்பில் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிபர் ஆசிரியர்களுக்கு சீரான எரிபொருள் வழங்கப்படாமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மூதூர் கிளை ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து நடை பவனியாக கிழக்குமாகாண ஆளுநர் அலுவலகம் வரை சென்று ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் நாம் பெட்ரோலுக்கு வரிசையில் நிற்பதா!? பாடசாலை செல்வதா?. அதிபர் ஆசிரியர்கள் கடமைக்கு செல்ல எரிபொருள் வழங்கு, உரிமைக்குரல் உதய ரூபனை தாக்கிய காடையணை கைது செய், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் அராஜகத்தை உடன் நிறுத்து, அதிபர் ஆசிரியர்களின் கல்விச் சேவையை கௌரவப்படுத்து போன்ற பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதன்போது ஆளுநர் அலுவலகத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் மட்டக்களப்பில் உதய ரூபனை தாக்கியவரை கைது செய்யுமாறும் தமது கல்வி நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு உரிய நேரத்தில் எரிபொருளை வழங்குமாறும் கோரி மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மூதூர்,கிண்ணியா மற்றும் திருகோணமலை செயலாளர் கோகுலதாஸ் இவ்வாறு கருத்து தெரிவித்தார்….
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்குமாகாண செயலாளரும் இணைப்பாளருமான பொன்னுத்துரை உதய ரூபன் அவர்கள் கடந்த 20ஆம் திகதி கொலை முயற்சியுடன் ஒருவரினால் தாக்கப்பட்டு இன்றுவரை சிகிச்சை பெற்று வருகின்றார் அவருக்கான நீதியை பெற்றுக் கொடுக்கும் முகமாக இவ்வாறு தாக்கப்பட்ட காடையனை கைது செய்யுமாறும் இந்தத் தாக்குதலுக்கு உறுதுணையாக இருந்த மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மேல் மாகாண பாடசாலைகள் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழமைபோல் இயங்கி வரும் இத்தருணத்தில் அதிபர் ஆசிரியர்களுக்கு உரிய முறையில் எரிபொருள்களை வழங்காமையினால் உரிய நேரத்தில் அவர்களின் பணியை செய்ய முடியாது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே கிழக்கு மாகாண ஆளுநர் என்றவகையில் இதற்கான உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் மாகாண முழுவதும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் எனவும் இக்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-ரவ்பீக் பாயிஸ் –