மாலத்தீவில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சிக்கு ஒரு குழுவினர் இடையூறு ஏற்படுத்தினர்.
கலோலு மைதானத்தில் மக்கள் யோகாசனம் செய்துகொண்டிருந்தபோது ஒரு குழுவினர் மைதானத்திற்குள் நுழைந்து, யோகாசன நிகழ்வை குழப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
அங்கிருந்து தப்பியோடிய மக்கள் மீதும் அந்த குழுவினர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
மாலத்தீவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், மாலைதீவு இளைஞர், விளையாட்டு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் மாலத்தீவுக்கான ஐ.நா அலுவலகம் இணைந்து யோகா தின நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
சம்பவம் நடந்தபோது, மாலத்தீவு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர், இந்திய உயர் ஆணையர் மற்றும் மாலத்தீவு வெளியுறவுச் செயலர், ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இருந்தனர்.
குழப்பத்தின் பின்னர், நிகழ்ச்சி மீண்டும் தொடங்கி வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
மாலைதீவு ஜனாதிபதி இப்ராகிம் முகமது சோலிஹ் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளார்.
“கலோலு மைதானத்தில் இன்று காலை நடந்த சம்பவம் குறித்து மாலைதீவு பொலிசாரால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என்று ட்வீட் செய்த ஜனாதிபதி, “இது தீவிரமான கவலைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது, மேலும் பொறுப்பானவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்று கூறினார்.
மாலைதீவு காவல்துறை விரைவில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில், மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி யாமீன் மற்றும் அவரது கட்சி பிபிஎம் இதற்கு பின்னணியில் இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிரான நிலைப்பாடுடையவர் யாமீன். அவர் சீனாவிற்கு நெருக்கமானவராகவும் அறியப்படுகிறார்.
இதேவேளை, இந்து மதத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு நடைமுறையாக மாலைதீவில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவது குறித்து தங்கள் கவலைகளை தெரிவித்து மத அறிஞர்களை உள்ளடக்கிய ‘இல்முவேரிங்கே குல்ஹுன்’ என்ற மத அமைப்பு இஸ்லாமிய அமைச்சகத்திற்கு திங்கள்கிழமை கடிதம் அனுப்பியுள்ளது.
உடற்பயிற்சி என்ற பெயரில் யோகா இஸ்லாம் மற்றும் மாலத்தீவு அரசியல் சாசனத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வை நிறுத்துமாறு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
‘யோகா தினம்’ நிகழ்ச்சி முதலில் ரஸ்ஃபன்னு பகுதியில் நடத்தப்பட இருந்தது. இருப்பினும், பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து ரஸ்ஃபன்னுவில் நிகழ்வை நடத்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய Male’ நகர சபை முடிவு செய்தது.