இன்றைய தினம் மேலும் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் எண்ணிக்கையில் குறைப்பு காணப்பட்டாலும், அடுத்த வாரத்திற்குள் நிலைமை வழமைக்குத் திரும்பும் என நம்புவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச குறிப்பிட்டார்.
நாளாந்தம் சுமார் 5,000 இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாகவும், கடந்த சில நாட்களாக சுமார் 4,600 முதல் 4,700 பஸ்கள் மட்டுமே இயங்கியதாகவும் அவர் கூறினார்.
புதிய எரிபொருள் விநியோக பொறிமுறையுடன் சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக பண்டுக ஸ்வர்ணஹன்ச குறிப்பிட்டார்.
தற்போது தனியார் பேருந்துகள், அம்பியூலன்ஸ்கள், சுற்றுலாத்துறையில் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் மாணவர்களை பாடசாலைக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் போன்றவற்றுக்கு அதன் டிப்போக்கள் ஊடாக எரிபொருளை வழங்கி வருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
தமக்கு போதுமான அளவு எரிபொருளை பெற்றால், மற்ற துறைகளில் உள்ள வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.
இலங்கை போக்குவரத்து சபையின் சில டிப்போக்களின் சொந்த தேவைககு 5,000 முதல் 6,000 லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாகவும், எனவே ஏனைய துறைகளில் உள்ள வாகனங்களுக்கு டீசலை விடுவிப்பதற்கான தமது கோரிக்கையை அதிகாரிகள் முதலில் நிறைவேற்ற வேண்டும் எனவும் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.