யாழில் சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சபை பேருந்திற்குள் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தி, அவரிடமிருந்த ரூ.40,000 இற்கும் மேற்பட்ட பணத்தை திருடிக் கொண்டு தப்பியோடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழ்- பருத்தித்துறை சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்த போதும், பொலிசாரின் பாதுகாப்பு உறுதிமொழியையடுத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று (18) மாலை 6.40 மணியளவில் பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தில் ஏறிய இரண்டு நபர்கள், புத்தூர் சந்தி பகுதியில் நடத்தினர் மீது தாக்குதல் நடத்தி விட்டு, அவரிடமிருந்த ரூ.40,000 இற்கும் அதிக பணத்தை திருடிக் கொண்டு தப்பியோடினர்.
தாக்குதலில் படுகாயமடைந்த நடத்துனர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
நேற்று இரவே, வழிப்பறி கொள்ளையன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தமது பாதுகாப்பை உறுதி செய்ய வழியுறுத்தி, பருத்தித்துறை சாலை ஊழியர்கள் இன்று காலையில் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வதாக அறிவித்தனர்.
எனினும், இரண்டாவது கொள்ளையனையும் கைது செய்து விட்டதாகவும், பாதுகாப்பு உத்தரவாதம் தருவதாகவும் பொலிசார் வழங்கிய வாக்குறுதியையடுத்து இன்று காலையில் வழக்கம் போல சேவைகள் ஆரம்பித்துள்ளன.