எவ்வித கொடுப்பனவும் இல்லாமல் பணியாற்ற தயாராக இருப்பதாக யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
யாழ் மாநகர சபை அமர்வு இன்று (16) இடம்பெற்ற போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாட்டில் காணப்படும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில், உள்ளூராட்சி சபையின் உறுப்பினர்களுக்கு கொடுப்பனவு வழங்க முடியாத சூழலில், சபையை கலைப்பதென அரசாங்கம் தீர்மானமொன்றை எடுக்கும் நிலைமை ஏற்பட்டால், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் எவ்வித கொடுப்பனவுமில்லாமல் பணியாற்ற தயாராக இருக்கிறார்கள் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணைக்கு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான தர்சானாந்த், நித்தியானந்தன் எதிர்ப்பு தெரிவித்தனர். தமக்கு மாத சம்பளம் அவசியம் என்றனர்.
43 உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் முன்மாதிரியான தீர்மானம் என முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
அதை மறுத்த தர்சானந்த், இது முந்திரிக்கொட்டை தனமான தீர்மானம் என விமர்சித்தார்.