மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் மட்டுமே இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக இலங்கை தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே இன்று அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பொதுமக்கள் எரிபொருள் வரிசையில் நிற்பதைத் தவிர்க்குமாறு சங்கத்தின் செயலாளர் டி.வி.சாந்த சில்வா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
பொதுவாக வெசாக் மற்றும் பொசன் போயா நாட்களில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும், எனினும் இன்று விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் சில்வா தெரிவித்தார்.
இன்று காலை வரை 30 பவுசர்கள் மட்டுமே கொலன்னாவ இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு வந்துள்ளதாக அவர் கூறினார்.
நேற்று நாடளாவிய ரீதியில் 200க்கும் குறைவான மையங்களிற்கே எரிபொருள் வழங்கப்பட்டதாகவும், இன்று குறைவான மையங்களிற்கே விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்தில் நாளை எந்தெந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கும் என்ற விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அந்த நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
350-400 பௌசர்கள் வழமையாக செயற்படும் அதேவேளை தற்போது 30 பவுசர்கள் மூலம் எரிபொருள் விநியோகத்தில் 2-3 வீதத்தை மாத்திரமே விநியோகிக்க முடியும் என சில்வா தெரிவித்தார்.
50-75 எரிபொருள் ஓர்டர்கள் மட்டுமே கையிருப்பில் உள்ள பவுசர்கள் மூலம் நிறைவேற்றப்படும் என்றும், அதனால் எந்த எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மீண்டும் நிரப்பப்படும் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
முன்னறிவிப்பு இன்றி எரிபொருள் கையிருப்பு விநியோகிக்கப்படும் போது எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக சில்வா கூறினார்.