சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி. இவர் சென்னை காவல் துறையில் ஏற்கெனவே புகார் ஒன்று அளித்திருந்தார்.
அதில், “சென்னையில் ஓர் இடம் வாங்க விருப்பப்பட்டு, சிறுசேரியில் உள்ள இடத்தை வாங்குவதற்கு திரைப்படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனிடம் பல தவணையாக ரூ.3.15 கோடி வரை கொடுத்தேன்.
பின்பு அந்த இடம் குறித்து உடன்பாடு ஏற்படாத காரணத்தால் ஒரு சிறிய தொகையை திருப்பிக் கொடுத்து மீதமுள்ள தொகை ரூ.2.70 கோடியை கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர்.
இதுகுறித்துக் கேட்டபோது இணை தயாரிப்பாளர் ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் என்னை மிரட்டினர். எனவே என்னிடம் மோசடி செய்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து சூரி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தை நாடினார். இதையடுத்து அன்புவேல் ராஜன், ரமேஷ் குடவாலா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்தது. இந்நிலையில், ரமேஷ் குடவாலா மற்றும் அவரது மகன் விஷ்ணு விஷால் ஆகியோரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில், தங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என இருவரும் போலீஸாரிடம் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்ததாக நடிகர் சூரியிடம் போலீஸார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.