வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற விரும்பும் அரச ஊழியர்களை பணியகத்தில் பதிவு செய்யுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
பணியகத்தின் இணையத்தளத்தின் ஊடாக தேவையான தகவல்களை உள்ளிட முடியும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அமைச்சின் தலையீட்டுடன் அந்நியச் செலாவணியை உருவாக்கும் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அதற்கமைவாக அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் நாணயக்கார வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலைய அதிகாரிகளுடன் நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அரச ஊழியர்களுக்கு அந்தந்த ஓய்வூதியம் மற்றும் பணி மூப்புக்கு இடையூறுகள் இன்றி வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் சுற்றறிக்கையை வெளியிடுவது தொடர்பாக பொது நிர்வாக அமைச்சுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என்றார்.
அரச ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் முக்கிய பங்காற்றுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.