வடமராட்சி, வதிரி பகுதியில் நேற்று உயிரிழந்த பெண்ணின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய, உடல் மாதிரி அரசபகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்படவுள்ளது.
நெல்லியடிபொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதிரிப் பகுதியில் நேற்று புதன்கிழமை மூதாட்டி மரணித்தார்.
சபாநாயகம் இலட்சுமிப்பிள்ளை (72) என்ற மூதாட்டியே உயிரிழந்தார்.
தனது உறவினரான அயல்வீட்டு இளைஞன் தாக்கினார் என நேற்று காலை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன்பின்னர் வீடு திரும்பிய மூதாட்டி,நேற்று மதியமே வீட்டில் உயிரிழந்தார்.
இளைஞன் தனது தலையை தாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
மூதாட்டியின் உடல் இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடற்கூறாய்விற்கு உள்ளாக்கப்பட்டது.
இதன்போது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை, மேலதிக பரிசோதனைக்காக உடல் மாதிரிகளை அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இளைஞனின் வாங்குமூலம்
மூதாட்டியின் முறைப்பாட்டையடுத்து வதிரியை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
தனது தந்தையை அந்த மூதாட்டி தொடர்ந்து திட்டியதாகவும், இறந்து போகும்படி குறிப்பிட்டு வந்ததாகவும், கடந்த வாரம் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
அண்மைக்காலமாக பிறிதொரு இடத்தில் வசித்து வந்த மூதாட்டி, நேற்று வீட்டுக்கு வந்ததாகவும், அவரை மண்ணள்ளி திட்டினேனே தவிர தாக்கவில்லையென இளைஞன் குறிப்பிட்டார்.
இளைஞன் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.