சர்வதேச சிலம்ப சம்மேளத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் மெய்வல்லுனர் போட்டியில் சிலம்பக்கலையின் பேராசான் கணபதிப்பிள்ளையின் மாணவரும் அகத்தியம் பாரம்பரிய கலைச் சங்கத்தின் தலைவரும், சர்வதேச சிலம்ப சம்மேளத்தின் இலங்கைகுரிய தலைவருமான அமரசிங்கம் குமணன் இரண்டு தங்கப்பதக்கத்தையும் அவரது மாணவர்கள் இரண்டு தங்கப்பதக்கங்களையும் வென்று மொத்தமாக இலங்கைக்கு நான்கு தங்கப்பதக்கங்களை பெற்றுக்கொடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
சர்வதேச சிலம்ப சம்மேளத்தினால் வருடாந்தம் நடத்தப்பட்டு வரும் சர்வதேச சிலம்ப மெய்வல்லுனர் போட்டியின் 2021ம் ஆண்டிற்குரிய போட்டியானது கனடா நாட்டின் ஏற்பாட்டில் 2021 நவம்பர் 14 முதல் 28 வரை நடைபெற இருந்த போதிலும் உலக நாடுகளின் அசாதாரண நிலைமையால் பிற்போடப்பட்டு 17 டிசம்பர் இணையவழி மூலம் இடம்பெற்றிருந்தது.
இந்தியா, இலங்கை, கனடா, மலேசியா, சிங்கப்பூர், வட அமெரிக்கா, டுபாய் மற்றும் கட்டார் ஆகிய 8 நாடுகளை சேர்ந்த சுமார் 400 வீரர்களும், 200 வீராங்கனைகளும், பங்குபற்றியிருந்த இப்போட்டியின் முடிவுகள் அண்மையில் வெளியாகிய நிலையில் மட்டக்களப்பைச் சேர்ந்த சிலம்பக்கலையின் பேராசானான கணபதிப்பிள்ளையின் மாணவரும், அகத்தியம் பாரம்பரிய கலைச் சங்கத்தின் தலைவரும், சர்வதேச சிலம்ப சம்மேளத்தின் இலங்கைகுரிய தலைவருமான அமரசிங்கம் குமணன் குறித்த போட்டியில் சிரேஷ்ட பிரிவில் இரண்டு தங்கப்பதக்கங்களையும், அவரது மாணவர்கள் கனிஷ்ட பிரிவில் இரண்டு தங்கப்பதக்கங்கள், நான்கு வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் ஐந்து வெண்கலப்பதக்கங்களையும் பெற்றிருந்தனர்.
அதேவேளை அமரசிங்கம் குமணன் 2020ம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டியிலும் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது என்பதுடன், வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பேராசான் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்கள் வழங்கி கௌரவித்திருந்தார்.
சிலம்பம் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கே உரித்தான பாரம்பரியத் தற்காப்புக்கலைகளை வளர்த்தெடுக்கும் நோக்கிலும், இன்றைய சந்ததியினருக்கு இவ்வாறான கலைகளை கையளிக்கும் நோக்கிலும் அகத்தியம் பாரம்பரிய கலைச் சங்கம் முன்னெடுத்து வருகின்ற அனைத்து முயற்சிகளும் பாராட்டுதலுக்குரியவையாகும்.
இதன்போது தங்கப் பதக்கத்தினை
கணேசமூர்த்தி லசிந்தா, பரமேஸ்வரன் மதுமிதா ஆகிய இரு மாணவர்களும், வெள்ளிப் பதக்கத்தினை
அரவிந்த் சுலாஞ்ஜனி, ரவீந்திரன் மேனுஷா, ராமதாஸ் லஜஹரி, பாலகிருஸ்ணன் துஷயந்தி ஆகிய மாணவர்களும், வெங்கலப் பதக்கத்தினை, அகிலன் ஜெனிபர்,
ராமநாதன் வேதிகாதெவி,
ஜெயரஞ்சன் மிதோஷனா,
அந்தோணிப்பிள்ளை அபியுத்,
பாலகிருஸ்ணன் கபிலாஷினி,
முரளி கொன்சிலா, விஜயன் விபுததரன், விஜய்குமார் விவேகா ஆகிய எட்டு மாணவர்களும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.