‘கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட பகுதியை பொலித்தீன் பாவனையற்ற பிரதேசமாக மாற்ற ஓன்றினைவோம்’ எனும் தொனிப்பொருளில் பாரிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலித்தீன் பாவனையால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இருந்து விடுபடுதல் தொடர்பான விழிப்புணர்வு மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.மற்றும் சீ.பீ.எம்.நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையுடன் இணைந்து ஓட்டமாவடி சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் பொலித்தீன் பாவனை தொடர்பான விழிப்பூட்டல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன்,ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள், வியாபாரிகளுக்குஅறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் என்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ஏ.காருன் மற்றும் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.நிறுவனத்தின் இணைப்பாளர் அன்பழகன் மற்றும் நிறுவனங்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
-வாழைச்சேனை நிருபர்-