ஐபிஎல் சீசனில் இருந்து பெங்களூரு அணி வெளியேறியுள்ள நிலையில், ரசிகர்களின் அன்பு குறித்து விராட் கோலி நெகிழ்வாக பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் பயணத்தில் கோப்பை வெல்லும் கனவில் மீண்டும் ஒரு முறை தோல்வி அடைந்துள்ளது ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் சீசனின் குவாலிபையர் – 2 போட்டியில் ஜோஸ் பட்லர் சதத்தால் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது. பெங்களூரு இம்முறையும் கோப்பையின்றி வெளியேறியது. வழக்கத்தைவிட இந்த சீசனில் பெங்களூருவுக்கான ஆதரவு அதிகமாக இருந்தது. மும்பை டெல்லி போட்டியிலே ரசிகர்களின் ஆதரவு பெங்களூரு அணிக்கு எப்படி இருந்தது என்பது தெரிந்தது.
இதனிடையே, ரசிகர்களின் ஆதரவு குறித்து விராட் கோலி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். தனது ட்விட்டரில், “சில சமயங்களில் நீங்கள் வெற்றிபெறுவீர்கள் அல்லது வெற்றி பெறாமல் இருப்பீர்கள். ஆனால், வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு அனைத்து போட்டிகளிலும் எங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்.
நீங்கள் தான் கிரிக்கெட்டை சிறப்பாக மாற்றுகிறீர்கள். இந்த பயணத்தில் கற்றல் ஒரு போதும் நிற்காது. எங்களுக்கு ஆதரவாக இருந்த எங்களின் நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் எனது நன்றி. அதேபோல் எங்களின் ஒரு பகுதியாக இருக்கும் அனைவருக்கும் எனது நன்றி. அடுத்த சீசனில் சந்திப்போம்” என்று விராட் கோலி நெகிழ்ந்துள்ளார்.