இலங்கையில் யாழ்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான் தான் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி, தமிழர்கள் என்றும் சிறப்பு வாய்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
சென்னை சென்ற பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ரயில்வே, நெடுஞ்சாலை, தொழில்துறை உள்ளிட்ட துறைகளின் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை தொடக்கி வைத்தார்.
பின் அவர் பேசியதாவது:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் மற்றும் தமிழக சகோதர, சகோதரிகளே வணக்கம். தமிழகம், தமிழ் மொழி, தமிழக மக்கள், தமிழர்களின் கலாச்சாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தமிழ் மொழி நிலையானது; மிகவும் அழகானது. தமிழ் கலாசாரம் உலகளாவியது. தமிழகத்தில் வருவது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும்.
சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென் ஆப்ரிக்கா வரை தமிழ் கலாச்சாரம் உள்ளது. ஒவ்வொரு துறையினிலும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிறப்பு வாய்ந்தவர்களாக உள்ளனர். அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.
செவித்திறன் குறைவுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற 16 பேரில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கேன்ஸ் பட விழாவில் எல்.முருகன் தமிழர்களின் பாரம்பரிய உடையில் பங்கேற்று சிவப்பு கம்பள வரவேற்பு பெற்றார்.
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி வேகமெடுக்கும். சாலை வளர்ச்சி திட்டங்கள் பொருளாதார வளர்ச்சியோடு நேரடி தொடர்பு உடையவை. சென்னை – பெங்களூரு விரைவு சாலை திட்டம் இரு முக்கிய நகரங்களை இணைக்கிறது. மதுரை – தேனி ரயில் சேவை திட்டம் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும் அப்பகுதி மக்களுக்கும் மிகப்பெரிய பலனை அளிக்கும். எதிர்கால தேவையை நோக்கமாக கொண்டு திட்டங்கள் தீட்டப்படுகின்றன. கலங்கரை விளக்கம் திட்டத்தின் மூலம் வீடுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சென்னையை போல இந்தியாவின் பிற பகுதிகளிலும் சரக்கு முனையம் கட்டப்படும். இங்குள்ள அனைவரும் உங்களது குழந்தைக்கு சிறப்பான எதிர்காலத்தை அளிக்க விரும்புகிறீர்கள். ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் போது, அது வளர்ச்சி அடைந்த நாடாகிறது. தலைசிறந்த உள்கட்டமைப்பு கொண்ட நாடு வளர்ச்சி அடைந்த நாடாக கருதப்படுகிறது. எனவே உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை தலையாய நோக்கமாக கொண்டு அரசு செயல்படுகிறது. உள்கட்டமைப்பு மீது கவனம் செலுத்துவதால் இந்தியாவின் இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.
திட்டங்கள் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் செயல்பட்டு வருகிறோம். எரிவாயு குழாய் திட்டம் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக குடிநீரை கொண்டு செல்ல பணியாற்றி கொண்டிருக்கிறோம். அதிவேக இன்டர்நெட் சேவை, எரிவாயு வழித்தடம், சாலை கட்டமைப்பு என புதிய பாதைகளில் வளர்ச்சிக்காக பயணிக்கிறோம். ஒவ்வொரு கிராமத்திற்கும் அதிவேக இன்டர்நெட் சேவையை கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டுள்ளோம்.
தேசிய கல்வி கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். தேசிய கல்வி கொள்கையால் மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படும். பனாரஸ் இந்து பல்கலையில், பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.
நட்பு நாடான இலங்கைக்கு அனைத்து வகையிலும் இந்திய அரசு உதவி வருகிறது. இலங்கை தமிழர்களுக்கு சுகாதாரம், வீட்டுவசதி உள்ளிட்டவற்றை இந்தியா ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் தொடர்ந்து செய்யப்படும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இப்போது இலங்கைக்கு உதவி செய்கிறார்கள். இலங்கையில் யாழ்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான் தான். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
உரையை தொடங்கும் போது ‘வணக்கம்’ என துவங்கி உரையை துவங்கிய பிரதமர் மோடி, உரை முடிந்தபின் ‘நன்றி வணக்கம்’ என கூறி தனது உரையை முடித்தார்.
மேலும், ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்ப தேன் வந்து பாய்ந்தது காதினிலே.. ‘ என்ற பாரதியின் வரிகளை குறிப்பிட்டு பேசினார்.