பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் தனிப்பட்ட பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரே பொலிஸ் சார்ஜன்டை சுட்டுக் கொன்றதாகவும், பொலிஸ் சார்ஜன்டின் கைத்துப்பாக்கி கைது செய்யப்பட்டவரிடமிருந்து மீட்கப்பட்முள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த (9) இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது சந்தேகநபர் நாடாளுமன்ற உறுப்பினரைத் தாக்கியதுடன் அவரது பாதுகாவலர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கிடைத்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விசாரணையில் தெரியவந்த தகவல்கள், காணொளிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்படும் போது சார்ஜன்ட்டின் துப்பாக்கியும் வைத்திருந்தார்.
இம்மாதம் 9ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவும், பாதுகாப்பு உத்தியோகத்தரும் வாகனத்தில் பயணித்த போது சந்தேக நபர்கள் நிட்டம்புவ பிரதேசத்தில் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
முன்னாள் பிரதமருக்கு ஆதரவாக அலரிமாளிகைக்கு சென்றதாகக் கூறி, நாடாளுமன்ற உறுப்பினர், பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது பாதுகாவலரை தாக்கி படுகொலை செய்தமை தொடர்பில் இதுவரை 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.