ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 3ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி கோபிகா ஸ்ரீ என்பவர் சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேமித்த பணத்தை இலங்கை நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தமிழக அரசு சார்பில் ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் தொன் அரிசி, ரூ.15 கோடி மதிப்பிலான 500 தொன் பால் பவுடர், ரூ.28 கோடியில் 137 வகையான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்களும் முதற்கட்டமாக இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பு வைக்கப்பட்டுள்ளன.
முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பல்வேறு தரப்பினர் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பாக்கியம் – கவிதா தம்பதியரின் எட்டு வயது மகள் கோபிகா ஸ்ரீ. இவர் கடந்த சில மாதங்களாக சைக்கிள் வாங்குதற்காக உண்டியலில் பணம் சேமிக்க தொடங்கி உள்ளார்.
தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ரூ.2,002 பணத்தை பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகனிடம் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்படும் மக்களுக்காக சனிக்கிழமை வழங்கினார்.
அதனை பெற்றுக் கொண்ட கோட்டாச்சியர் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தார்.