முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை பேரறிவாளன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பேரறிவாளனுக்கு வாழ்த்துகளை கூறினர். முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் வாழ்த்து பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் பேரறிவாளன் தனது தாயார் அற்புதம்மாளுடன் சந்தித்தார். அப்போது பேரறிவாளன், “தனது விடுதலைக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், அன்றைய அதிமுக அரசும் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக எடப்பாடி பழனிசாமியிடம் நன்றி தெரிவித்துக்கொண்டார்” என்று அதிமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.