அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் அவரது உரைக்கு இடையூறு விளைவித்ததால் இன்று (18) பிற்பகல் பாராளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிலர், “கொலைகாரன், கொலைகாரன், நீதான் எல்லாவற்றையும் செய்தாய்” என்று கூச்சலிட்டனர்.
இதன்போது உரையாற்றிய அனுரகுமார திஸாநாயக்க, ஜே.வி.பி அத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சும் கட்சியல்ல. ஜே.வி.பி.யின் உறுப்பினர்கள் அண்மைய வன்முறைகளில் ஈடுபட்டிருந்தால், எந்தவொரு விசாரணைக்கும் முகங்கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 450 பேரில் 150 பேர் ஜே.வி.பி.யை சேர்ந்தவர்கள் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அனுரகுமார, அப்படியானால் பொலிஸ் மா அதிபர் அவர்களுக்கு ஜே.வி.பி.யின் உறுப்புரிமையை வழங்கியிருக்க முடியும். 1988ல் தனது வீடும் தீயில் எரிந்து நாசமானது என்றார்.
தனது வீட்டிற்கு தீ வைக்க வந்தவர்களில் ஜே.வி.பியின் பலமான ஒருவரும் உள்ளடங்குவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இதன்போது அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கூச்சலிட ஆரம்பித்தனர்.
அமைதியாக போராடும் மக்கள் மீது பொதுஜன பெரமுன குண்டர்கள் தாக்குதல் நடத்தியதாலேயே சகல பிரச்சினைகளும் ஏற்பட்டதாகவும், அந்த சம்பவத்தால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.