ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான திகாமடுல்ல மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம் திருமலையை சேர்ந்த எம்.எஸ்.தௌபீக் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனுராதபுர மாவட்ட இஷாக் ரஹுமான் ஆகியோர் நேற்று (14) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தனர்.
தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள இந்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் முகமாக ஐக்கிய மக்கள் சக்திக்கு தங்கள் ஆதரவை வழங்குவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்கால அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து முன்னெடுப்பதாகவும் இதன் போது அவர்கள் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
மேற்குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு பின்னர் தனது ஆதரவை விலக்கிக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.