அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் பற்றாக்குறையை நீக்கி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன மற்றும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் கலந்துரையாடி மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கான யோசனைகளை கோருவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மருந்துப்பொருள் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் பணியையும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் உர நெருக்கடி குறித்து ஆராய்ந்து அறிக்கையளிக்கும் பணியையும் மேற்கொண்டுள்ளார். பெற்றோலியம் தொடர்பான பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல சாகல ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, சமூகத்தின் உண்மையான நிலைமைகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேரடியாக அறிக்கை அளிக்க இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.