மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தொங்கிய நிலையில் நேற்று முன்தினம் (29) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
17 வயதுடைய பரமானந்தம் ரோஜா என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
முதலைக்குடா கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த யுவதி தனது தாய் தந்தையருடன் ஆரையம்பதி, செல்வாநகர் பகுதியில் தென்னம்தோட்டம் ஒன்றினை பராமரித்து வருவதாகவும் தென்னம் தோட்டத்தில் உள்ள மாடி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவானின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மற்றும் சட்டவைத்திய அதிகாரி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.