திருமண நிகழ்ச்சியின் போது மணப்பெண் ஒருவர் முன்னாள் காதலனால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மதுரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு முபாரிக்பூர் கிராமத்தில் நௌஜீல் பகுதியில் இன்று வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணம் குறித்து அறிந்த முன்னாள் காதலன், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில், தனது நண்பர்களிடம் காதலி பிரிந்துவிட்டதாக கூறி புலம்பி தள்ளியுள்ளார்.
இந்நிலையில் அந்த இளைஞர், காதலியின் திருமண நிகழ்ச்சிக்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அப்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், மணப்பெண் தன் அறை நோக்கி சென்றுள்ளார். இதையெல்லாம் கவனித்துக்கொண்டு மணப்பெண்ணை பின்தொடர்ந்த அந்த இளைஞர் திடீரென்று கையில் வைத்திருந்த துப்பாக்கியால் காதலியை சரமாரியாக சுட்டுவிட்டார். இதில் பலத்த காயமடைந்த மணமகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குபி ராம் பிரஜாபதி ஏன்.ஐ-யிடம் கருத்து தெரிவிக்கையில், ”’என் மகள் “ஜெய் மாலா’ திருமண சடங்கு முடிந்து மணமகள் அறைக்கு சென்ற போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து சுட்டுக் கொன்றார். இது நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை என்றார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.