தலாய் லாமாவால் ‘பஞ்சென் லாமா’வாக நியமிக்கப்பட்டு 27 ஆண்டுகளுக்கு முன்னா் காணாமல் போன திபெத்திய சிறுவன், சீன குடிமகனாக இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாக சீனா செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
சீன குடிமகன் மற்றும் அவருடைய இருப்பிடம் குறித்த அமெரிக்காவின் கவலை, சீனாவை களங்கப்படுத்தும் அரசியல் முயற்சியாகும் எனவும் சீனா கூறியுள்ளது.
திபெத்திய பெளத்த மதத்தில் தலாய் லாமாவுக்கு அடுத்த இடத்தில் மதிப்புக்குரியவராகப் போற்றப்படுகிறாா் பஞ்சென் லாமா. பஞ்சென் லாமாவின் மறுபிறவியை அடையாளம் கண்டறிந்து சிறு வயதிலேயே அவரை தலாய் லாமா நியமிப்பாா். அதுபோல தலாய் லாமாவின் மறுபிறவியை அடையாளம் கண்டு அடுத்த தலாய் லாமாவை நியமிப்பதில் பஞ்சென் லாமாவின் பங்கு முக்கியமானது.
அந்த வகையில், 11வது பஞ்சென் லாமாவாக கெதுன் சோக்கி நியிமா என்ற 6 வயது திபெத்திய சிறுவனை தற்போதைய தலாய் லாமா 1995இல் நியமித்தாா். திபெத் தனது நாட்டின் ஒரு பகுதி எனக் கூறிவரும் சீனா, அந்தச் சிறுவனின் நியமனத்தை நிராகரித்தது. மேலும், 7 வயது சீன சிறுவன் ஒருவரை பஞ்சென் லாமாவாக நியமிப்பதாக அறிவித்தது.
இந்நிலையில், தலாய் லாமா நியமித்த நியிமா அடுத்த சில நாள்களிலேயே காணாமல் போனாா். அவா் சீனாவின் கட்டுப்பாட்டில் அவா் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நியிமா மாயமாகி 27 ஆண்டுகள் கடந்த நிலையில், அவரது 33வது பிறந்த நாளையொட்டி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஓா் அறிக்கை வெளியிட்டது.
அதில், 1995, மே 17ஆம் திகதி 11வது பஞ்சென் லாமாவை சீன அரசு கடத்திச் சென்றதிலிருந்து அவா் எங்கிருக்கிறாா் எனத் தெரியவில்லை. அவா் எங்கிருக்கிறாா் என சீனா தெரியப்படுத்த வேண்டும்; தனது மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரத்தை முழுமையாக நிறைவேற்ற அவரை சீனா அனுமதிக்க வேண்டும்.
திபெத்தியா்களின் மத சுதந்திரம், அவா்களின் தனித்துவமான மத, கலாசார, மொழி அடையாளங்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. தலாய் லாமா, பஞ்சென் லாமா போன்ற தமது சொந்தத் தலைவா்களை அரசின் தலையீடின்றி திபெத்தியா்கள் தோ்ந்தெடுக்கவும் அமெரிக்கா ஆதரவளிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா பதில்: இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் பெய்ஜிங்கில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத சுதந்திரத்தை ஒரு காரணமாகப் பயன்படுத்தி சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை உறுதியாக எதிா்க்கிறோம். ஆன்மிகச் சிறுவனாக அழைக்கப்படும் (பஞ்சென் லாமா) அவா், ஒரு சாதாரண சீன குடிமகன். ஒரு சாதாரண வாழ்க்கையை அவா் வாழ்ந்து கொண்டிருக்கிறாா். அவரும், அவரது குடும்பத்தினரும் தாங்கள் தொந்தரவு செய்யப்படுவதை விரும்பவில்லை. இந்த விஷயத்தை அரசியல் லாபத்துக்காகவும் சீனாவை சிறுமைப்படுத்துவதற்காகவும் பயன்படுத்துவதைக் கைவிட்டு, அவா்களின் விருப்பத்தை புரிந்துகொண்டு அதற்கு அமெரிக்கா மதிப்பளிக்க வேண்டும் என்றாா்.
திபெத்தின் 14வது தலாய் லாமா 1959இல் அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தாா். ஹிமாசல பிரதேசத்தின் தா்மசாலாவை தலைமையிடமாக கொண்டு நாடு கடந்த திபெத்திய அரசை அவா் நிா்வகித்து வருகிறாா்.