ருவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை சமீபத்தில் வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது அந்நிறுவனத்தை 44 பில்லியன் டொலருக்கு விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ருவிட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை கடந்த சில வாரங்களுக்கு முன் வாங்கினார். கடந்த 9ஆம் திகதி, ருவிட்டர் இயக்குனர் குழுவில் எலான் மஸ்க் இணைவதாக இருந்தது.
இந்நிலையில் ருவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்க இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில், நேற்று இரு தரப்புக்கும் இடையே முதற்கட்ட பேச்சு நடைபெற்றுள்ளது.
கடந்த 14ஆம் திகதியன்று எலான் மஸ்க், ஒரு பங்கு 54.20 டொலர் என்ற விலையில், அதாவது, கிட்டத்தட்ட 3.31 இலட்சம் கோடி ரூபாய்க்கு ருவிட்டரை வாங்க தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். ருவிட்டர் நிறுவனத்துடன் முதல் கட்ட பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து , 44 பில்லியன் டொலருக்கு ருவிட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ருவிட்டரை எலன் மஸ்க் முழுமையாக வாங்கியதால், பங்கு சந்தையில் டுவிட்டரின் விலை 3 இலட்சம் கோடி வரை உயர்ந்தாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.