தனியார் பஸ்களை இயக்குவதற்கு போதியளவு டீசல் கிடைத்த போதிலும், கடந்த சில நாட்களாக பஸ்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, அண்மைய பஸ் கட்டண உயர்வு பஸ்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
தங்களுக்கு டீசல் தட்டுப்பாடு இல்லை என்றும், தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடரும் எதிர்ப்புக்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் காரணமாக புத்தாண்டு விடுமுறைக்காக கொழும்பில் இருந்து சென்ற கணிசமானோர் இன்னும் நாடு திரும்பவில்லை என கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.
ஒரே நேரத்தில் வருவாய் இழப்பு, செயல்பாட்டு செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளதால் கடும் சிரமத்தை எதிர்நோக்குவதாக அவர் கூறினார்.
பாடசாலைகளில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் காரணமாக இன்று வீதிகளில் மக்கள் மற்றும் பஸ்களின் எண்ணிக்கை குறையுமென எதிர்பார்ப்பதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.