நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரி அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று (25) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல பொருளாதார மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் சூழலை எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களையும், ஆசிரியர்களையும் அருகில் உள்ள பாடசாலைகளில் இணைக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இது அதிகாரிகளால் மறுக்கப்பட்டது.
இதனையடுத்து, ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு மத்தியில் நீதி கோரி நாடு முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இன்றைய அடையாள வேலை நிறுத்தத்தை தொடர்ந்து, 28ஆம் திகதிக்கு பிறகு நீண்ட வேலைநிறுத்தம் நடத்துவது குறித்து முடிவு செய்வோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கூறினார்.