லங்கா இந்தியன் ஒயில் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்ததன் மூலம் தமக்கு பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் லங்கா இந்தியன் ஒயில் கூட்டுத்தாபனம், எரிபொருள் விலைகளை அதிகரித்திருந்தது.
கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஊடக மற்றும் பிரசார செயலாளர் கபில கலாபிடகே, நாட்டில் எண்ணெய் விலையை நிர்ணயிப்பது யார், இந்தியா நாட்டில் தீர்மானங்களை எடுக்குமா என கேள்வி எழுப்பினார்.
இவ்வாறான தீர்மானங்களினால் 950,000 முச்சக்கர வண்டி சாரதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சி பேதமின்றி பொதுமக்கள் கைகோர்த்து ஜனாதிபதியை வீடு செல்ல கோரி வருவதாகவும் கலாபிடகே தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இவ்வாறான முயற்சிகளுக்கு மத்தியில் லங்கா ஐஓசி இரண்டு மாதங்களுக்குள் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக விலைகளை அதிகரித்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனத்தின் விலைகளிற்கு ஈடாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இன்று முதல் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.