அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை வவுனியாவில் கண்டன போராட்டம் இடம்பெற்றது.
குறித்த கண்டன போராட்டம் காலை 10 மணியளவில் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன் இடம் பெற்றது.
சிவில் அமைப்புக்கள்,பொது அமைப்புக்கள் , மற்றும் வவுனியா மாவட்ட மக்கள் இணைந்து குறித்த கண்டன போராட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அரசின் தூர நோக்கற்ற நிதி நிர்வாக முகாமைத்துவத்தால் நாடு பெரும் பொருளாதார பின்னடைவு டன் பட்டினிச்சாவை நோக்கியுள்ளது.
இதனை கண்டித்து தன்னிச்சையாக ஒன்று கூடிய பொதுமக்கள் இளைஞர் யுவதிகள் பாடசாலை மாணவர்கள் கோட்டபாய ராஜபக்ஷ அரசுக்கு எதிராக பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், பொருட்களுக்கு தட்டுப்பாடு, எரிபொருட்கள் எரிவாயு தட்டுப்பாடு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாமல் செய்தல், பொது மக்களுக்குச் சொந்தமான காணியை இராணுவம் அபகரிப்பு தொடர்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.