நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் நாளை (13) வெளியாக உள்ள நிலையில், அதனை பார்த்து ரசிக்க பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்ப்பார்ப்புடன் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பீஸ்ட்’. பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன் என புது கூட்டணியில் எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் பீஸ்ட் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.
முன்னதாக ‘அரபிக் குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ போன்ற படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர்கள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது படக்குழு.
பீஸ்ட் படத்திற்கான முன்பதிவு கடந்த வாரமே தொடங்கிய நிலையில், நாளை படம் வெளியாவதை அடுத்து ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்துக்கு தயாராகி விட்டனர்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள திரையரங்குகளில் பேனர்கள், கட் அவுட்கள் போன்றவற்றை ரசிகர்கள் உற்சாகத்துடன் அமைத்து வருகின்றனர்.
காலை 4 மணி, 7 மணி சிறப்புக் காட்சிகளுக்கு டிக்கெட் விலை உயர்ந்திருப்பதாக கூறப்பட்டாலும், ரசிகர்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து பீஸ்ட் மோடுக்கு ரெடியாகிவிட்டனர். இந்த நிலையில் பீஸ்ட் படம் ரிலீஸை ஒட்டி பல்வேறு நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.
பீஸ்ட் திரைப்படத்தை பார்ப்பதற்காக ஏராளமான ஊழியர்கள் அடுத்தடுத்து விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளதாலும், அதனை தவிர்க்கும் வகையில் நிறுவனங்களே விடுமுறை அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்தவகையில் திருப்பூரில் செயல்படும் நிட்பிரைன் என்ற பின்னலாடை நிறுவனம், சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஆரா இன்ஃபோமேட்டிக்ஸ் என்ற ஐ.டி நிறுவனம் மற்றும் பிட்ரி உள்ளிட்ட நிறுவனங்கள் நாளை தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்திருக்கின்றன.
அதிலும் ஒரு சில நிறுவனங்கள், பீஸ்ட் படத்துக்கான டிக்கெட்களை இலவசமாக வழங்கி ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.